ஆம்பூர் அருகே ஒற்றை தந்த ஆண் யானை நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை
கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வணசரக அலுவலர் பாபு கூறுகையில், சானாகுப்பம் காப்புக்காடு, பனங்காட்டேரி மலை கிராமத்தையொட்டியுள்ள பகுதிகளின் வழியாக முதிர்ந்த ஆண் யானை ஒன்று தனது வழக்கமான பாதையில் வந்து, நேற்றிரவு சாணாங்குப்பம் காப்புக்காட்டினுள் எட்டி குட்டை பகுதியில் நல்ல நிலையில், பாதுகாப்பான முறையில் தங்கியுள்ளது. இதனை ஆம்பூர் வனத்துறையினர் உறுதிப்படுத்தியும், தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.
கடந்த சுமார் 45 வருடங்களுக்கு மேலாக தனது வழக்கமான பாதைகளில் இந்த வயது முதிர்ந்த ஒற்றை தந்தம் உடைய ஆண் யானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எந்த செயல்களிலும் மேற்கண்ட யானை ஈடுபட்டதில்லை. கண்பார்வை சற்று குறைந்த நிலையிலும் தனக்கு தேவையான உணவுக்காக மட்டுமே காப்புக்காட்டையொட்டியுள்ள பகுதிகளில் நடமாடும். மற்ற சமயத்தில் காப்புக்காட்டினுள் இருக்கும். பொது மக்கள் அச்சமடையாமல் எச்சரிக்கையுடன் இருந்தால் போதுமானது.
யானை நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் இது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும், காப்புக்காட்டையொட்டியுள்ள பொதுமக்களும், மலை கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களும் இரவு நேரங்களில் வெளியில் நடமாடும் போது எச்சரிக்கையாக இருக்கும்படி வன சரக அலுவலர் கேட்டுக்கொள்கிறார் யானை நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் இந்த எண்ணிற்கு ( 97862 54998 ) தொடர்பு கொள்ளலாம்.