சந்தேக நபர்கள் நடமாட்டம் -பரமத்தி வேலூர் டிஎஸ்பி எச்சரிக்கை
டிஎஸ்பி ராஜமுரளி
பரமத்தி வேலூர் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு, சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பின் உஷாராக இருக்குமாறு பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதிக்குட்பட்ட ஜேடர்பாளையம் கரப்பாளையத்தில் இளம்பெண் மர்ம மரணத்தை அடுத்து, அப்பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறியது. அதனை தொடர்ந்து கைது படலம் ஒருபுறம் இருப்பினும், தொடர்ந்தும் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்த்து. அதனைத் தொடர்ந்து 6 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர், தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் ஐந்தாவது வார்டில் இரு முதியவர்கள் கொலை வழக்கிலும் கொலையாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தொடர் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதிய நபர்கள் வீடு வாடகை கேட்டு வந்தாலோ, அல்லது தங்கும் இடங்களில் தங்குவதற்கு அனுமதி கேட்டு வந்தாலோ, அவர்களிடம் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என வேலூர் டிஎஸ்பி ராஜமுரளி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், பரமத்தி வேலூர் சப் டிவிஷனுக்கு உட்பட்ட வேலூர், பரமத்தி, ஜேடர்பாளையம், வேலகவுண்டம்பட்டி, நல்லூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு வாடகைக்கு கேட்டு வருவார்களிடமும், அல்லது தங்கும் அறைகளில் தங்குவதற்கு வருபவர்களிடமும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றின் நகல்களை வாங்கி வைத்து, அவற்றை அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் அளித்து, ஒப்புதல் பெற்ற பின்னரே குடி அமர்த்த வேண்டும் அல்லது தங்க வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், வாடகைக்கு குடியி ருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் பரமத்தி வேலுார் தாலுகா சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு, விடுதிகளில் அறை எடுத்து தங்கி பகல், இரவு நேரங்களில் வீடுகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் பல்வேறு நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் நடைபெற்ற குற்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பரமத்திவேலூர் முகவரியை அளித்து விட்டு, அதிகாரிகள் விசாரணையின் போது, இந்த முகவரி போலியானவை அல்லது அவர்கள் இங்கிருந்து தப்பித்து விட்டார்கள் என தெரிய வந்திருப்பதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story