வாக்குச்சாவடியில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு எம்பி நிதி உதவி

வாக்குச்சாவடியில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு எம்பி நிதி உதவி

எம்பி நிதி உதவி

ராமநாதபுரம் வாக்குச்சாவடியில் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு எம்பி நிதி உதவி.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். வேலை நிமித்தமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மலேசியா சென்ற சங்கர் அங்கேயே உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மனைவி சாந்தி(38) தனது மூத்த மகள் சஷ்டீஸ்வரி (12), (7ம் வகுப்பு), இளைய மகள் பாவனா (10), ( 5ம் வகுப்பு) ஆகியோருடன் அதே கிராமத்தில் வசித்து வந்தார். 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளியான சாந்தி, கடந்த ஏப்.19ல் நடந்த தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் விநியோகிக்கும் பணியில் வருவாய்த்துறை ஆலோசனைப்படி ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தலின் படி ஈடுபட்டிருந்தார். பூத் ஸ்லிப் விநியோகிக்கும் பணி நிறைவடைந்த பின் வேதாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்த குஞ்சார்வலசை வாக்குச்சாவடி மையத்தில் ஏப்.19 மாலை வாக்களிக்க சென்றார். அப்போது சாந்திக்கு விரலில் மை வைத்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அங்கு தேர்தல் பணியிலிருந்தவர்கள் சாந்தியை மீட்டு உச்சிப்புளி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பெற்றோரை இழந்த 2 பெண் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அரசு உதவ வேண்டுமென சங்கரின் தாயார் குருவம்மாள் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் ஏப்.20ல் கோரிக்கை மனு அளித்தார். அது தொடர்பான பரிசீலனை நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து கேட்டறிந்த தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அந்த இரண்டு குழந்தைகளுக்கு உதவிட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலரான தர்மர் எம்பியிடம் அறிவுறுத்தினார். இதனையடுத்து பெற்றோரை இழந்து தவிக்கும் பெண்களான சஷ்டீஸ்வரி, பாவனா ஆகியோருக்கு தர்மர் எம்பி இன்று ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிதி உதவி அளித்தார். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதாகவும் தர்மர் எம்பி உறுதியளித்தார். இந்த நிகழ்வில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றிய செயலர்கள் சீனிமாரி (மண்டபம் கிழக்கு) முத்து முருகன் (ராமநாதபுரம்), சுரேஷ் (போகலூர்), உடையத்தேவன் (திருப்புல்லாணி), ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலசுப்ரமணியன், மண்டபம் நகர் துணைச்செயலாளர் பூபதி குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சிவ வடிவேலு, மண்டபம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் கதிரவன், துணை தலைவர் ராஜேஷ், தகவல் தொழில்நுட்ப தரவு மேலாண் மாவட்ட செயலாளர் முத்துராஜ், நெசவாளர் அணி ஒன்றிய தலைவர் திலீப், அர்ஜுனன் (இந்து முன்னணி), குஞ்சார்வலசை கிளை தலைவர் முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story