எம்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை

எம்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்:  விக்கிரமராஜா கோரிக்கை

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி சந்தை பிரச்னைக்கு முழுமையான தீர்வு காண எம்.பி., ராசா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோவை மண்டலக் கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு, மண்டல தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட தலைவர் முகம்மது பாரூக் வரவேற்றர்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், வரும் மே மாதம் 5ம் தேதி நடக்கும் வணிகர் தின மாநாட்டில் அனைத்து வணிகர்களும் கலந்துக் கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பெரும் நிறுவனங்கள் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் பொருட்களை பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். ஆனால், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் எடுப்பதில்லை. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளிடம் சென்று அதிகாரிகள் பிளாஸ்டிக் ரெய்டு என்ற பெயரில், அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பது தொடர்கிறது. இதனால், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்னையில் அதிகாரிகள் பாரபட்சம் பார்க்க கூடாது.

ஊட்டி நகராட்சி சந்தையில் தற்போது கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், பல ஆண்டுகளாக அங்கு கடை வைத்து நடத்தி வருபவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அவர்களுக்கு முறையான மாற்று இடம் அளிக்க வேண்டும். மேலும், வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் குறைந்தபட்ச வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். வியாபாரிகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.

ஆவின் பால் பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு ஒரு நியாயம், வியாபாரிகளுக்கு ஒரு நியாம் என்று இல்லாமல், ஆவின் பாலை மாற்று முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து, பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் வியாபாரிகளை அரசு அதிகாரிகள் துன்புறுத்தி வந்தால், அதனை தடுக்க மண்டலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். ஊட்டி நகராட்சி சந்தையில், தற்காலிக கடைகள் கட்டுவதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்த நீலகிரி எம்.பி., ராசாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், மார்க்கெட் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காண எம்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்திற்குள் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால், வியாபாரிகள், லாட்ஜ் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் உட்பட சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, இதை கருத்தில் கொண்டு இந்த நடைமுறையை கொண்டு வரக்கூடாது. பான் பராக் உட்பட போதை பொருட்கள் விற்பனை செய்யவதாக கூறி கடைகளில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ரெய்டு என்ற பெயரில் வியாபாரிகளை துன்புறுத்தி வருவதையும்,

அவர்களுக்கு அபராதம் விதிப்பதையும் நிறுத்த வேண்டும். இது குறித்து மே மாதம் நடக்கும் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த மாநாட்டில், நீலகிரி மாவட்டம், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story