நகராட்சி அவசரக் கூட்டம்
பள்ளிபாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அவசர கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர மன்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ் ,துணைத் தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினர் . நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலை வகித்தார். அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 14-வது வார்டு உறுப்பினர் சுஜாதா மாரிமுத்து பேசும் பொழுது நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், நகராட்சிக்கு என தனியாக ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். 20-வது வார்டு உறுப்பினர் சரவணன் பேசும்பொழுது, காவிரி ஆற்று நீரை பருகும் பெண்களில், அதிகளவு புற்றுநோயாளி பெண்கள் காவிரி கரையோரம் வசிப்பதாக, செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் நீர் எத்தகைய முறையில் சுத்தம் செய்யப்படுகிறது!? சுத்தம் செய்யப்படுவதற்கு என்னென்ன மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.
நீரின் தர அளவு என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மற்றொரு வார்டு கவுன்சிலர் கூறும் பொழுது நகராட்சி சார்பில் தொழில் நடத்துவதற்கான உரிமை கட்டணத்தை கட்டச் சொல்லி நகராட்சி நிர்வாகத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். . மேலும் சிறு, குறு தொழில்களாக இருக்கக்கூடிய விசைத்தறி தொழில் கூடங்களுக்கு தொழில் நடத்துவதற்கான லைசன்ஸ் பெற வேண்டுமென கட்டணம் கேட்கிறார்கள் ஏற்கனவே மின்சார கட்டண உயர்வு,ஜிஎஸ்டி ,நூல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் நசிவை சந்தித்து வருகிறது. சிறிய அளவில் 4 விசைத்தறிகளை கொண்டு இயங்கும், விசைத்தறிக்கூடங்களுக்கு உரிமை கட்டணத்தை வரியை ரத்து செய்திட வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த நகர் மன்ற தலைவர் அப்படி வரியை ரத்து செய்திட நகராட்சிக்கு அதிகாரம் இல்லை. இருந்தபோதிலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இவ்வாறாக கூட்டம் நடைபெற்றது.