பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
அழகியபாண்டிபுரம், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி பேரூராட்சிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் வட்டார அளவிலான ஆர்ப்பாட்டம் குமரி மாவட்டம், அழகியபாண்டிபுரம், பூதப்பாண்டி மற்றும் ஆரல்வாய்மொழி பேரூராட்சிகளில் நேற்று மாலை நடைபெற்றது. ஆரல்வாய்மொழி பேரூராட்சி முன்பு கோரிக்கை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பேரூராட்சி பணியாளர்கள் சங்க குமரி மாவட்ட துணை தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். ஏ ஐ டி யு சி மாவட்ட குழு உறுப்பினர் இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சியில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்களுக்கு ஊதிய குறைவு நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும், அனைத்து பணியாளர்களும் பயன்பெறும் வகையில் தர ஊதியம் 1900 வழங்க வேண்டும், மேலும் ஓய்வு பெற்ற பேரூராட்சி பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் மேகலிங்கம், முத்து, காளிமுத்து மற்றும் பேரூராட்சிகளை சேர்ந்த பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
Next Story