பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து - ரூ. 2 லட்சம் சேதம்

பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -  ரூ. 2 லட்சம் சேதம்

தீயை அணைக்கும் பணி

குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரிக்கும் கிடங்கில் மர்ம நபர்கள் குப்பைக்கு தீ வைத்ததால் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் நாள் ஒன்றுக்கு ஐந்து டன் குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் குத்தாலம் அருகே தோப்பு தெருவில் உள்ள வளமீட்பு பூங்கா குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உரம் தயாரிக்கவும், மக்கா குப்பைகள் பழைய இரும்பு வியாபாரிகளிடமும் விற்பனை செய்யப்படுகிறது.

கேரி பேக்குகள் சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வளமீட்பு பூங்கா குப்பை கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதில், பிளாஸ்டிக் கழிவுகளை துண்டு துண்டாக நறுக்கும் இயந்திரமும் சேதமடைந்ததால் சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குத்தாலம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது தொடர்பாக தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.

Tags

Next Story