பள்ளிபாளையம் அருகே பூ வியாபாரி படுகொலை: போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள தாஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பாக காலமாகிவிட்டார். ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில், மகனுடன் தாஜ்நகர் பகுதியில் வசித்து வந்தார்.
ஆறுமுகம் சைக்கிளில் சென்று பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை பள்ளிபாளையம் கீழ் காலனி என்ற பகுதி அருகே, வாக்கிங் சென்றவர்கள் ஆண் சடலம் ஒன்று கல்லால் தாக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் இருப்பதைக் கண்டு பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார், காவல் உதவி ஆய்வாளர் அத்தியப்பன் உள்ளிட்ட போலீசார் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டது தாஜ்நகர் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ஆறுமுகம் என்பது தெரிய வந்தது.. இதனை அடுத்து சடலத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசாரின் தொடர் விசாரணையில், மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் தினந்தோறும் இரவு வெகு நேரம் கழித்து மகன் வடிவேலு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்ததால் எப்படியும் தந்தை வீட்டிற்கு வந்து விடுவார் என மகன் வடிவேலு இரவு முழுவதும் அவரை தேடாமல் இருந்துள்ளார்.
கொலை நடைபெற்ற இடத்தின் அருகிலேயே அரசு மதுபான கடை செயல்பட்டு வருவதால் ஆறுமுகத்துடன் மது அருந்த வந்தவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் ஏதும் உள்ளதா என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.