வாலிபர் கொலை; இருவர் கைது
கோவை, ஜல்லிப்பட்டியில் வாலிபர் ஒருவரை கட்டையால் தாக்கி கொன்று, குட்டையில் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி கிராமத்தில் வாலிபர் ஒருவரை கட்டையால் தாக்கி கொலை செய்து குட்டையில் வீசி சென்ற சம்பவத்தில் இரு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுல்தான் பேட்டை ஒன்றியம் சின்ன கம்மாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பிரகாஷ் (34) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி வசந்தி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ஜல்லிபட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிய பிரகாஷ் எதிர்புறம் உள்ள குட்டையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.அப்போது மது போதையில் அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மர்ம நபர்கள் பிரகாசை அங்கிருந்த விறகு கட்டைகளால் தாக்கியுள்ளனர்.இதில் அவரது தலை முகம் இடுப்பு கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்து உயிரிழந்தார். இதனைடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
நேற்று காலை அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் குட்டையில் காயங்களுடன் நிர்வாண நிலையில் சடலம் கிடப்பதை பார்த்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டாஸ்மாக் கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி கொலையாளிகளை தேடி வந்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளில் சந்தேகப்படும்படியான இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் சிவமணி என்பதும், ஜல்லிபட்டி அருகே செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தேங்காய் களத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் சம்பவத்தன்று இரவு இளைஞர்கள் இருவரும் மது போதையில் கட்டிங் கேட்டு பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அங்கிருந்த கட்டையால் அவரை தாக்கி கொன்றுவிட்டு தப்பி ஓடியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.