மகனை கொலை செய்து விபத்து போல் சித்தரிப்பு: தந்தை,பேரன் கைது

மகனை கொலை செய்து விபத்து போல் சித்தரிப்பு: தந்தை,பேரன் கைது

கைது செய்யப்பட்ட முதியவர்

வெள்ளியணை அருகே மகனை கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரித்த தந்தை மற்றும் பேரன் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், ஜெகதாபியை சேர்ந்தவர் மாரியப்பன் என்கிற மனோகரன் (43) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி சுதா(40) என்ற மனைவியும், பிரிய லட்சுமி(17) என்ற பெண் குழந்தையும், திவாகரன்(13) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மனோகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மது போதை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக, சேலத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் மனோகரன் வீட்டிற்கு நேர் எதிரே அவருடைய தந்தை மாணிக்கம் (71) புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார்.

இதனை மனோகரனின் மனைவி சுதா எங்கள் வீட்டிற்கு நேர் எதிராக ஏன் வீடு கட்டுகிறீர்கள், எனது கணவர் வந்த பின்பு வீடு கட்டும் பணியை தொடங்குங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம், மது போதையில் வந்து மருமகள் சுதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்த தனது கணவர் மனோகரனிடம் சுதா கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனோகரன் இது குறித்து தனது தந்தை மாணிக்கத்திடம் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணிக்கம் தனது மகள் வழி பேரன் மணிராஜை வரவழைத்து, மனோகரனை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து, குச்சியால் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் மனோகரன் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதை மனோகரனின் மனைவி சுதாவிடம் கூறி, இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி, நெருங்கிய உறவினர்கள் சிலரை மட்டும் வரவழைத்து சாலை விபத்தில் மனோகரன் இறந்து கிடந்ததாக கூறி, உறவினர்களுடன் சேர்ந்து மனோகரன் உடலை சுடுகாட்டுக்கு தூக்கி சென்று எரித்து விட்டனர். இதுகுறித்து மனோகரனின் மனைவி சுதா அளித்த புகாரின் பேரில், வெள்ளியணை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாணிக்கம் மற்றும் மணிராஜை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். பெற்ற தந்தையே தன் மகனை கொலை செய்த விவகாரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story