கோவில் விழாவில் இசை கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த தம்பத்துகோணம் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார் (46) இவர் மேளம் இசைக்கும் கலைஞர். இவர் தனது குழுவினருடன் நேற்று முன்தினம் இரவு கோட்டார் பகுதியில் உள்ள ஒரு கோயில் திருவிழாவிற்கு இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.
நள்ளிரவு பூஜை நடந்து கொண்டிருந்தபோது, சாந்தகுமார் மற்றும் அவரது குழுவினர் மேளம், நாதஸ்வரம் இசைத்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்தர்கள் சாமியாடுவதற்கு ஏற்ப சாந்தகுமார் மேளம் அடித்து கொண்டு இருந்தார்.
அந்த நேரம் திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே சாந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். கோவில் திருவிழாவிற்கு வந்த மேள கலைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
