மொஞ்சனூரில் நடந்த கும்பாபிஷேக விழாவில் இஸ்லாமியர்களும் பங்கேற்பு

கரூர் மாவட்டம் ,மொஞ்சனூரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் இஸ்லாமியர்களும் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, மொஞ்சனூர் மேல்பாகம் பகுதியில் காளிபாளையம், தொட்டியபட்டி, சிவன்மலை வலசு, தேவனாம்பாளையம் கிராமங்களைச் சார்ந்த அருள்மிகு தஞ்சமநல்லூர் விநாயகர், அருள்மிகு சித்தி விநாயகர், அருள்மிகு உமைய காளியம்மன், அருள்மிகு கருப்பணசாமி மற்றும் பரிவார ஆலயம் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை நான்காம் காலை யாகசாலை பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் நாடி சந்தானம் ஸபர்சாகூதி திரவியக்கூதி மகா பூர்ணாபதி மகா தீபாரதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று பின்னர் புனித நீரை கோவில் கலசத்திற்கு எடுத்துச் சென்று புனித நீரை கலசத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இந்த கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ பங்கேற்றார்.

மேலும், பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள், பக்தர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்களுக்கு கும்பமரியாதையும் அளிக்கப்பட்டது. மேலும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பள்ளப்பட்டி நகர் மன்ற தலைவர் முனைவர் ஜான் தலைமையிலான இஸ்லாமியர்களும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story