விழுப்புரம் அரசு கல்லூரியில் இலக்கிய மன்றத்தின் சார்பில் முத்தமிழ் விழா
விழாவில் கலந்து கொண்டவர்கள்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது. தமிழ் இலக்கிய மன்ற தலைவர் மாணவி கனிமொழி வரவேற்பு ஆற்றினார்.
தமிழ் இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர் குணசேகர் அறிமுக உரை வழங்கினார். கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமையுரையாற்றினார். தமிழ்த் துறைத் தலைவர் கலைச்செல்வி முன்னிலை உரை வழங்கினார். இயற்பியல் துறைத் தலைவர் சேட்டு,இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் கனகசபாபதி, இணைப்பேராசிரியர் அசோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவரும் தற்போதைய கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி முதல்வருமான முனைவர் மாதவி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் தமிழ் அன்றும் இன்றும் என்னும் பொருண்மையில் உரையாற்றினார்.
அவர் உரையாற்றுகையில் உலக மொழிகளில் தனித்துவமான மொழி தமிழ் ஆகும் . இம்மொழி தொன்மையான இலக்கண, இலக்கியங்களைக் கொண்டு விலங்குகின்றது. தொல்காப்பியம் தொட்டு இன்றைய படைப்பிலக்கியங்கள் வரை தமிழர்க்கான வாழ்வியலை உணர்த்துகின்றன. உலக மக்கள் வாழ்வியலில் தமிழர் பண்பாடு சிறந்து விளங்குவதற்கு நமது இலக்கியங்களே முக்கிய காரணம் என்று பல்வேறு அறிவுரைகளை எடுத்துக் கூறினார்.
பின்னர் மாணவ, மாணவியர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், தமிழ்த் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் மஞ்சுளா நன்றி கூறினார்.
இந்நிகழ்வினை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி இந்து தொகுத்து வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ் துறை பேராசிரியர்கள் கலைச்செல்வி, அருள்தாஸ், அசோகன், சுசன் மரி நெப்போலியன், இலட்சுமணன், குணசேகர், இராஜவேல் ஆகியோர் செய்திருந்தனர்.