"என் கனவு என் எதிர்காலம்" பட்டமளிப்பு விழா
கரூர் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளியில் மாணாக்கர்களுக்கு "என் கனவு என் எதிர்காலம்" என்ற தலைப்பில் பட்டமளிப்பு விழா அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ தலைமையில் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ. மூர்த்தி, மாணவர்களின் எதிர்காலம் பற்றிய கனவுகளை பெற்றோர்களிடம் தனி கடிதம் மூலம் எழுதி வாங்கினார். மேலும், மாணவர்களிடமும் எதிர்காலத்தில் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்ற கடிதமும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டது.
அதன் அடிப்படையில் சில மாணவர்கள் இஸ்ரோ சயின்டிஸ்ட், எம்பிபிஎஸ், ஐஏஎஸ், ஐபிஎஸ், பல்கலைக்கழக பேராசிரியர்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இதன் அடிப்படையில், பெற்றோர்களின் விருப்பப்படியும், மாணவர்களின் விருப்பப்படியும் ஒவ்வொருக்கும் பேட்ச் ஒன்று தயாரிக்கப்பட்டது. பள்ளியில் தற்பொழுது பயின்று வரும் 93- மாணவர்களிடமிருந்தும் கடிதம் மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்து, பேட்ச் தயாரிக்கப்பட்டு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.
இது முற்றிலும் ஒரு புதுமையான விழா. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த அரவக்குறிச்சி எம் எல் ஏ , இந்த தகவல்களை அறிந்து, கனவு விதைகளை மாணவர்களின் மனதில் விதைக்க வேண்டும் என்று விரும்பிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டியும் மாணவர்களுக்கு இந்த கனவு மிக விரைவில் நிறைவேற வேண்டும் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார் . இந்த விழாவில் பள்ளி மாணாக்கர்கள் அவரது பெற்றோர்கள், கிராம பொதுமக்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் நவீன்,முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம், கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .