ஆலங்குடியில் மர்ம கும்பல் அட்டூழியம் - பொதுமக்கள் அச்சம்

ஆலங்குடி நகரில் பிரதான சாலையில் வணிக நிறுவனங்கள், பெட்டிக் கடைகள் மற்றும் கூட்டுறவு வங்கி ஏடிஎம் கண்ணாடி ஆகியவற்றை உடைத்து முகமூடியோடு அட்டூழியம் செய்த மர்ம நபர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை விட அதிக மக்கள் பயன்பாட்டில் உள்ள இடமாகவும், பேருந்து நிறுத்தத்தில் மக்கள் குவியும் பிரதான பகுதிகளாகவும் அரச மரம் பேருந்து நிறுத்தமும், வடகாடு முக்கம் பேருந்து நிறுத்தமும் இருந்து வருகிறது. இந்த பகுதிகளில்தான் பொதுமக்கள் அதிகம் கூடும் சூழலிலும், குடிகாரர்கள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டமும் அதிகமாக இதே பகுதிகளில் நடமாடுவதோடு மாதம் இருமுறையாவது அராஜகச் செயல்களில் ஈடுபடுவதும் வழக்கமாகி வருகிறது.

நேற்று மாலை நேரத்தில் அரச மரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் முகமூடியை அணிந்தவாறு திரிந்த இருவர் கையில் அரிவாளை வைத்தபடி அருகில் இருக்கும் பெட்டிக்கடை, ஜவுளிக்கடை, பூக்கடை மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கியின் ஏடிஎம் கண்ணாடி உள்ளிட்டவற்றை தாக்கி உடைத்ததோடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்ட நிலையில் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை அடையாளம் காண விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இது போன்ற அச்சுறுத்தும் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், அரசமரம் பகுதியில் ஒரு புறக்காவல் நிலையம் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடவும், வாகன சோதனையில் ஈடுபடவும், பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்திள்ளனர்.

Tags

Next Story