பரமத்தி வேலூர் அருகே 6 வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளை !
கொள்ளை
பரமத்தி வேலூர் அருகே 6 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பி.எஸ்.கே நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆசைத்தம்பி. இவரது மனைவி அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை நள்ளிரவு வீட்டினுள் தாள்பாள் போட்டுவிட்டு ஆசைத்தம்பி, அவரது மனைவி மகன் ஆகிய மூவரும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் கதவின் தாள்பாளை சத்தம் இல்லாமல் சாமார்த்தியமாக உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் மற்றொரு அறையில் இருந்த பீரோ மற்றும் அலமாரிகளை திறந்து அதில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த ஆசைத்தம்பி வெளியே ஓடி வந்துள்ளார். இதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும் பீரோ அலமாரிகள் திறந்து கிடப்பதும், அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசைத்தம்பி பரமத்தி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதேபோல் பி.எஸ்.கே நகரை அடுத்துள்ள ஜெயம் நகர் பகுதியில் அடுத்தடுத்து உள்ள மைனர் (எ) செங்கோட்டுவேலு, முத்துசாமி ஆகியோரது வீடுகளிலும் சுரேஷ் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். சுரேஷ் மட்டும் மர்ம நபர்களை பார்த்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். மேலும் பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டி நத்தமேடு தெரு பகுதியில் ஆள் இல்லாத தர்ஷன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஒரே இரவில் பரமத்தி பி.எஸ்.கே நகர் மற்றும் மாவுரெட்டி பகுதியில் அடுத்தடுத்து ஆறு வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் கைரேகைகளை பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் 6 வீடுகளில் எவ்வளவு பணம் மற்றும் நகைகள் திருட்டு போனது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 6 வீடுகளில் திருட்டு போனது அப் பகுதியில் உள்ள பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story