வாலிபர் மரணத்தில் மர்மம்- தனியார் மருத்துவமனை முற்றுகை

நாகர்கோவிலில் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மேலப்பெரு விளையை சேர்ந்தவர் ஆல்வின் அருள் ஜோஸ் (40). பழைய கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2-ம் தேதி பணகுடி பகுதியில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து உறவினர்கள் கூறுகையில், - மேலப்பெருவிளையில் உள்ள ஜெபமாலை ஆலய பங்கு நிர்வாக விவாகரம் தொடர்பாக ஆல்வின் அருள் ஜோஷுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இந்த விவகாரத்தில் தான் ஆல்வின் அருள் ஜோசை வடக்கன்குளம் பகுதிக்கு அழைத்து சென்று தாக்கி உள்ளதாகவும், நேற்று நன்றாக இருந்த அவர் திடீரென இப்படி இருந்திருக்கிறார் என்றும், இந்த சாவில் மர்மம் உள்ளது என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags

Next Story