நான் முதல்வன் திட்டம் : உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
2024-25 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி வாய்ப்புகள் நுழைவு தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு தயார் செய்வது கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள் (ம) ஆசிரியர்கள் மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் தலா 2500 மாணவர்கள் வீதம் 7 நாட்கள் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி 26.06.2024 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஐந்தாம் கட்டமாக இன்று கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரியில், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்ததாவது: இந்த நிகழ்ச்சி மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நீட், கிளாட், ஜே.இ.இ, மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளைஎவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். மதிப்பெண்கள் எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட எடுத்த மதிப்பெண்கள் மூலம் கிடைக்கும் வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் எடுக்கக்கூடிய சிறிய முயற்சியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றது.
நீங்கள் எந்த துறையில் சேர்ந்து படித்தாலும் அதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஐஐடி, நீட், கிளாட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்வது என்பது மிகப்பெரிய காரியம் அல்ல. வருடத்திற்கு 100 மணி நேரம் ஒதுக்கி அதை தொடர்ச்சியாக முயற்சி செய்தாலே போதும். ஆனால் இதனை ஆரம்பிப்பது எளிதாக உள்ளது. ஆனால் அதனை பெரும்பாலான மாணவர்கள் தொடர்ச்சியாக செய்வதில்லை. இதனை வள்ளுவர் உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் என்ற குறள் மூலம் யார் தன் நோக்கத்தோடு செயல்படாமல் ஒரு செயலை ஆரம்பித்துவிட்டு, பாதியில் விட்டு தோல்வியடைந்தவர்கள் பல பேர் என குறிப்பிடுகிறார்.
திறமை என்று தனியாக எந்த ஒரு உணர்வுகளும் இல்லை. ஒரு செயலை தொடர்ச்சியாக செய்து, அதன் மூலமாக வெற்றியடைவதே திறமை. 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் செல்ல கட் ஆப் மதிப்பெண்கள் என்னென்ன, பாடம் வாரியாக எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும். நீங்கள் செய்கின்ற சிறு முயற்சிகள் மூலமாக உங்களுடைய குடும்பம் கடினமான பொருளாதார நிலையில் இருந்து மிகவும் உயர்ந்த பொருளாதாரம் நிலைக்கு உயர முடியும். இன்னும் நிறைய பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிறைய செலவு செய்தால் தான் உயர் கல்வி படிக்க முடியும் என்ற கற்பிதங்கள் உள்ளன.
மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. உங்களுக்கான வாய்ப்பை சரியாக தேர்ந்தெடுத்து செயல்படுவதன் மூலம் நீங்கள் ஒரு ஐந்து வருடம் கழித்து இந்த வாய்ப்புகளை எல்லாம் இழந்திருக்கிறோமே என்று நீங்கள் திரும்பி பார்க்கின்ற போது ஏற்படுகின்ற வருத்தத்தை தவிக்க முடியும். ஆனால் அந்த வருத்தத்தை நீங்கள் இப்போது புரிந்து கொண்டால் நீங்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைமையில் இருப்பீர்கள்.
படிப்பதற்கு பணமோ பொருளாதாரமோ ஒரு பெரிய அளவுகோல் இல்லை. இன்று நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் இன்று எதுவெல்லாம் கடினமாக இருக்கின்றது என்று நினைக்கிறீர்களோ, எதுவெல்லாம் நீங்கள் அடைய முடியவில்லை என்று நினைக்கிறீர்களோ, அது ஒரு பொருளாதாரமாக இருக்கட்டும் சமூக அந்தஸ்தாக இருக்கட்டும் எல்லாவற்றையுமே நீங்கள் உங்கள் கல்லூரி முடிந்தவுடன் அடைய முடியும். அதற்கான மிகப்பெரிய வாய்ப்புகளை அரசு பல நூறு கோடிகளை கொட்டி இந்த அரசு மருத்துவக் கல்லூரி போன்ற நிறுவனங்களை நடத்துகிறார்கள். ஆனால் அரசு கல்லூரியில் படிக்க வருபவர்களுக்கு சில ஆயிரங்களில் மட்டும் தான். அதிலும் அவர்களுக்கு உதவித்தொகையும் கிடைக்கின்றன.
இந்த அரசு திட்டங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை பெறுவதற்கு முதலில் மதிப்பெண்கள் எவ்வளவு பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நுழைவுத் தேர்வு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிகளை மேற்கொண்டீர்கள் என்றால், இது போன்ற வாய்ப்புகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அப்படி வாய்ப்புகளை பெற்று கல்வியின் மூலமாக சிறந்த உயரங்களை அடைவதற்கான மாணவ, மாணவிகளாக நீங்கள் வரவேண்டும். வாழ்க்கையில் வெற்றி அடைவதற்காக பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.
இருப்பதிலேயே மிகவும் எளிதான வாய்ப்பு என்பது என்பது 12-ம் வகுப்பு படிக்கும் போது ஓரளவிற்கு முயற்சி செய்து நன்றாக படித்து, இந்த கல்வியின் மூலமாக கடின உழைப்பின் மூலமாக நீங்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் தான் வாய்ப்புகளிலேயே மிக எளிய வாய்ப்பு. இந்த நிகழ்ச்சியை நீங்கள் பயன்படுத்தி உங்களுடைய வாய்ப்புகளை தெரிந்து கொண்டு அந்த இலக்கை அடைந்து வெற்றியாளர்களாக மாற வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், விரிவுரையாளர்கள், உயர்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியர்கள் மூலம் உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நுழைவுத்தேர்வுகள், தேர்வுகளுக்கு தயார் செய்து எதிர்கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்;டது. மேலும், இந்நிகழ்ச்சியில், கடந்தாண்டுகளில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேளாண்மை, மருத்துவ படிப்பில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, தாங்கள் எப்படி அரசு பள்ளியில் இருந்து உயர்கல்வி வாய்ப்புகளுக்கு தேர்வு பெற்றார்கள் என்பது குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.