நாகை மாவட்டத்தில் கோடைமழை: 8ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி பாதிப்பு
பருத்தி பயிர்
நாகை மாவட்டத்தில் கோடை மழையால் 8 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி வயல்களில் தண்ணீர் தேக்கம் பயிர் பாதிப்பு விவசாயிகள் கவலை நாகை மாவட்டம் கீழ்வேளூர், திருமருகல் ஒன்றியத்தில் பெய்து வரும் கோடை மழையால் பருத்தி சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பருத்தி சாகுபடி நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடைமழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலான மழை இல்லை என்றாலும் தேவூர், செருநாலூர், காக்கழனி திட்டச்சேரி,திருமருகல், திருப்புகலூர்,திருக்கண்ணபுரம்,திருச்செங்காட்டங்குடி,மேலபூதனூர், சேஷமூலை,கட்டுமாவடி, குத்தாலம், நரிமணம், உத்தமசோழபுரம்,எரவாஞ்சேரி,மருங்கூர்,நெய்குப்பை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க இடங்களில் மழை பெய்துள்ளது.
இந்த மழை கோடை வெயிலுக்கு மக்களுக்கு இதமானதாக இருந்தாலும், பருத்தி விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.பருத்தி சாகுபடியை பொருத்தவரை செடிகளின் வேர்ப்பகுதியில் தண்ணீர் தேங்கக்கூடாது. இதனால் தான் தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்பில்லாத கரிசல் மண் பகுதிகளில் பருத்தி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
வண்டல் மண் நிறைந்த காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை காலங்களில் குறிப்பிடத் தகுந்த மழை இருக்காது.இதனால் விவசாயிகள் நம்பிக்கையுடன் பகுத்தி சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். தேவைப்படும் குறைந்த அளவிலான தண்ணீரை ஆழ்குழாய் பாசனம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பருத்தி சாகுபடி பணிகளை மேற்கொள்வார்கள்.கடந்த சில ஆண்டுகளாக திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கீழ்வேளூர் மற்றும் திருமருகல் ஒன்றியம் முழுவதும் சுமார் 8ஆயிரம் ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கடந்த சில தினங்களாக பெய்து வரும் கோடை மழையால் பருத்தி சாகுபடி செய்துள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீர் உடனடியாக வற்றிவிட்டால் பருத்தி பயிர்களுக்கு பாதிப்பு இருக்காது. 2 நாட்களுக்கு மேல் பருத்தி செடிகளின் வேர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் பட்சத்தில் பருத்தி செடிகள் அழுக தொடங்கும்.தண்ணீர் சத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இலைகள் உதிரும்.
இதனால் பருத்தி செடிகள் வீணாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் பருத்தி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்குழாய் மூலம் பெற வேண்டிய தண்ணீரை இந்த மழைநீர் ஈடுசெய்யும்.மழைநீரால் நெற்பயிர்கள் கூடுதல் பலத்துடன் வளர வாய்ப்பு உள்ளது என நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.