நாகப்பட்டினம் - வாக்கு எண்ணிக்கை மைய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை

நாகப்பட்டினம் - வாக்கு எண்ணிக்கை மைய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை

 ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்

நாகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்ட வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவற்றை பறக்கவிட தடைவிதித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்கான 2024 மக்களவை பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று முடிவடைந்துள்ள நிலையில், பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சட்டமன்ற தொகுதிவாரியாக நாகப்பட்டினம் வட்டம் செல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எதிர்வரும் 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில் சுழற்சி முறையிலும், இரண்டாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் ஆயுதம் ஏந்திய நிலையிலும், மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு மாநில காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாகாப்பிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது தவிர வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகம் முழுமையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு பணிகளை வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சார்பில் முகவர்கள் கண்காணிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

மேலும் தீ தடுப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டும், 24 மணி நேர தீயணைப்பு வண்டிகள் மற்றும் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழுமைக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் வட்டம் செல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் ட்ரோன்கள் உள்ளிட்ட வீடியோ கேமராக்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்றவை பறக்கவிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story