நாகை மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

நாகை மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
நாகை ஆட்சியர் அறிவிப்பு
இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்; ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

2024-2025 ஆம் ஆண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மை வளர்ச்சி அடையச் செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இளங்கலை பட்டப்படிப்பு முடித்த பட்டதாரி இளைஞர்கள் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களில் ஏதாவது ஒரு வேளாண் சார்ந்த தொழிலை தொடங்க முன்வரும் பட்டதாரிகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

வங்கி கடன் உதவியுடன் கூடிய வேளாண் சார்ந்த தொழிலை தொடங்க மட்டுமே அனுமதிக்கப்படும். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோர் நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் 21 முதல் 40 வயதுடைய இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும்.

கணினி திறன் பெற்ற மற்றும் குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர். தேவையான ஆவணங்களான 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பிற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தொடங்கவுள்ள தொழில் குறித்த விவரங்கள், வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகும்.

இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் பட்டதாரிகள் அக்ரிஸ்நெட் இணைய தளத்தில் பதிவு செய்து, அதன் நகலினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர், வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.

Tags

Next Story