ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு போல் செயல்படும் பிரதமர் மோடி
'பிரதமர் மோடி கனவு பலிக்காது'
மீண்டும் ஆட்சியை அமைத்து விடலாம் என்ற நோக்கில் அடிக்கடி பாரத பிரதமர் தமிழகத்திற்கு வருவதாகவும், மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்று நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு விமர்சித்துள்ளார்.
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீ.தம்புசாமியின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாகை மக்களவை உறுப்பினர் எம்.செல்வராசு கலந்துக்கொண்டு அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், "மீண்டும் ஆட்சியை அமைத்து விடலாம் என்ற நோக்கில் அடிக்கடி பாரத பிரதமர் தமிழகத்திற்கு வருகை தருகிறார். மழை வெள்ள பாதிப்பின் போது ஒரு ரூபாய் கூட நிதி தராத பாரத பிரதமர் எந்த முகத்தோடு தமிழகம் வருகிறார். தேர்தல் நெருங்கும் போது மட்டும் மக்களை வந்து சந்தித்து விட்டு சென்றால் அனைவரும் ஏமார்ந்து விடுவார்களா?.. ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது.
மக்கள் இந்த முறை நிச்சயமாக ஏமாற மாட்டார்கள். மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசு 5 மாநிலங்களில் தேர்தல் வந்த போது, ஓட்டு பெற 3 வேளாண் சட்டங்களை வாப்பஸ் பெறுவதாக பொய்யான வாக்குறுதியை கொடுத்ததது. ஆனால் இனிமேல் தமிழக விவசாயிகள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மக்கள் நல்லதொரு பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் , முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.சம்பந்தம், மாவட்ட துணை செயலாளர் கே.பாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர் வி.எஸ்.மாசேத்துங் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.