விவசாயி கொலை வழக்கில் தந்தை,மகன் உட்பட 5 பேருக்கு  ஆயுள்

விவசாயி கொலை வழக்கில் தந்தை,மகன் உட்பட 5 பேருக்கு  ஆயுள்

தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 

கன்னியாகுமரி அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகன் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி அருகே உள்ள லீ புரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (70). விவசாயி. இவர் தனது வீட்டுக்கு மின் இணைப்புக்கு விண்ணப்பித்தார். இதனை தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று மின்வாரிய ஊழியர்கள் அந்த வீட்டிற்கு வந்து ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயிகளான சுந்தர்ராஜ் (67) அவரது மகன் கோல்டன் தம்பி (35), ஜேக்கப் பால் (67) அவரது மகன் அருள் தேவதாஸ் . (35) மற்றும் ஜெயராஜ் (43) ஆகியோர் மின்னிணைப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் கோல்டன் தம்பி, அருள் தேவதாஸ், சுந்தர்ராஜ், ஜேக்கப் பால், ஜெயராஜ் ஆகிய ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் மதியழகன் ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story