உலாவியது சிறுத்தை அல்ல, காட்டு பூனை - வனத்துறை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள உழவன்கோணம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் மர்ம விலங்கு நடமாடிய காட்சிகள் இருந்தன. இது சிறுத்தை புலி என அந்தப் பகுதி முழுவதும் தகவல் பரவியது. இதை அடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இரவு நேரங்களில் அந்தப் பகுதிகளில் வெளியே நடமாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர். மேலும் வனத்துறையினர் இரண்டு இடங்களில் கேமராக்களை பொருத்தி கண்காணித்தனர்.
நேற்று முன்தினம் இரவு விடிய விடிய அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவில் மரத்தின் மேல் இருந்து டார்ச் லைட் அடித்து கண்காணித்தனர். இதில் அந்தப் பகுதியில் நடமாடுவது சிறுத்தை அல்ல காட்டுப் பூனை என்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கேமரா பகுதியில் இருந்து சற்று விலகிய நிலையில் பூனை நடமாடியதால் கேமராவில் அந்த காட்சி சரியாக பதிவாகவில்லை என கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். நடமாடுவது சிறுத்தை அல்ல காட்டு பூனை என வனத்துறை கூறி இருப்பதால் அந்த பகுதி பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.