நல்ல நாயகி அம்மன் பால்குட திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
நல்ல நாயகி அம்மன்
மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி நல்லநாயகி அம்மன் கோயிலில் பால்குட திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா மணக்குடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனம் மற்றும் கிராம ஏழுக்கரைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற நல்ல நாயகி அம்மன் கோயில், பொறையான் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு 6ம் ஆண்டு பால்குட திருவிழா நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு காப்பு கட்டிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பால் குடங்களை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது வானவேடிக்கையுடன் மேள-தாளங்கள் முழங்க பச்சைக்காளி, சிவப்புக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் அலங்கரிக்கப்பட்ட பால் காவடி, அலகு காவடி மற்றும் கரகத்தை எடுத்துச் சென்றனர். கோயிலுக்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி மற்றும் கரகத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் கொண்டுவந்த பாலை ஊற்றி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து இளநீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சந்தன காப்பு அலங்காரம் செய்து எலுமிச்சம் பழம் மாலை, மலர் மாலை, வேப்பிலை மாலை அணிவித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக பொறையான் சாமிக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. பூஜைகளை பூசாரிகள் நடராஜன், வெங்கடேஸ்வரன் ரமேஷ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story