ஆணி வேரான கிராமங்களை மறந்து விடக் கூடாது : திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் பேச்சு
எவ்வளவு உச்சத்தை தொட்டாலும், ஆணி வேரான கிராமங்களை மறந்து விஎவ்வளவு உச்சத்தை தொட்டாலும், ஆணி வேரான கிராமங்களை மறந்து விடக் கூடாது : திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் பேசினார் .
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஐந்தாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். மற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கி, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் பேசியதாவது, "மாணவ, மாணவிகளே உங்கள் பெற்றோர்கள் தான் உங்கள் வளர்ச்சிக்கு பின்னால் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை அளிப்பவராக உயர வேண்டும். பட்டம் பெற்றதோடு உங்கள் கடமை முடிந்து விடவில்லை. உங்களின் தனித்திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த துறையை தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த துறையில் உச்சத்தை தொட வேண்டும். கூட்டு முயற்சி தான் வெற்றி பெறும். உங்கள் முயற்சி சமுதாயத்தை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். அறிவியல் முன்னேற்றத்தின் அனைத்து வசதிகளும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் உணர்ந்து உழைக்க வேண்டும். வாழ்வில் எவ்வளவோ பட்டம், பதவி பெற்று வாழ்வில் உச்சத்தில் உள்ளோம். ஆனால், இன்றைக்கு நாம் கிராமங்களை மறந்து விட்டோம். உங்கள் ஆணிவேர் கிராமங்கள் தான் என்பதை உணர வேண்டும். நமது வளர்ச்சிக்கு வித்திட்டது, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, ஒழுக்கத்தை கற்றுத் தந்தது கிராமங்கள் தான் என்பதை மறந்து விடக்கூடாது. மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் விடாமுயற்சி, உழைப்பு, பண்பு, கலாச்சாரம் ஆகியவற்றை ஒருபோதும் விட்டு விடக்கூடாது" என்றார். பட்டமளிப்பு விழாவில் இளங்கலையில் 305 மாணவர்கள், 738 மாணவிகள் என 1,043 பேருக்கும், முதுகலையில் 11 மாணவர்கள், 47 மாணவிகள் என 58 பேருக்கும் ஆக மொத்தம் 1,101 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story