நாமக்கல் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி சிறுநீரக பிரச்சனையால் கோவையில் தீவிர சிகிச்சை !
அதிமுக வேட்பாளர் தமிழ்மணி
அதிமுக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழ்மணி கிரியேட்டின் அளவு உயர்ந்து சிறுநீரக செயல்பாடு பாதித்துள்ளதால் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோருடன் சுட்டெரிக்கும் வெயிலிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நாமக்கல் அதிமுக வேட்பாளர் சு தமிழ்மணி கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் வெயிலிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில் கடந்த வாரம் திருச்செங்கோடு பகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு அவருக்கு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. மயங்கி விழுந்த அவரை உடனடியாக கோவை பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிரியேட்டின் அளவு உயர்ந்து சிறுநீரக செயல்பாடு பாதித்துள்ளதால் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து அவரது பிரச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர் குணமடைந்து வீடு திரும்பினாலும் நீண்ட நாள் உடல்நல பிரச்சனைக்கான தீவிர சிகிச்சை மற்றும் வயது மூப்பின் காரணமாக பிரச்சாரத்தை தொடரமுடியுமா என கேள்வி எழுந்துள்ளது.