நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்
முத்தங்கி தரிசனம்
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் சாத்துப்படி இன்று (மே-31) நடைபெற்றது. நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இன்று காலை 9 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் சந்தனம், சீயக்காய், திருமஞ்சனம், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்றது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விலை உயர்ந்த முத்துக்களால் ஆஞ்சநேயருக்காக உருவாக்கப்பட்ட முத்தங்கியை பட்டாச்சாரியார்கள் அணிவித்தனர். பின்னர் 1 மணியளவில் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல் ஆஞ்சநேயரை முத்தங்கி சேவையில் தரிசித்தால், ராஜயோகம் கிடைப்பது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.மேலும் சனி பகவானின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்தருளுவார் அனுமன் என்று போற்றுகிறார்கள்.