நாமக்கல் புறவழிச்சாலை 3-ம் கட்ட பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டுகிறார்
நாமக்கல் புறவழிச்சாலை 3-ம் கட்ட பணிகள் - அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டுகிறார் - இராஜேஸ்குமார் எம்.பி தகவல்.
நாமக்கல் நகராட்சி முதலைப்பட்டியில் 04.03.2024 அன்று ரூ.194.00 கோடி மதிப்பீட்டில் முதலைப்பட்டியிலிருந்து திருச்சி சாலை வரை 4 கட்டங்களாக நடைபெறும் நாமக்கல் புறவழிச்சாலை திட்டத்தின் 3-ம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு மற்றும் முடிவுற்ற முதற்கட்ட பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, நாமக்கல் நகராட்சி பகுதியில் வாழும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நாமக்கல் நகரின் புறவழிச் சாலை மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதாகும். நாமக்கல் மிக விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நாமக்கல் புறவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை முதலைப்பட்டியில் ஆரம்பித்து தேசிய நெடுஞ்சாலை வள்ளிபுரம் வரை 22.387 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து நாமக்கல் நகரத்திற்குள் சென்று வெளியே வருவதாலும், லாரிபாடி கட்டுமானத்தொழில், கோழிப்பண்ணைகள் நிறைந்து உள்ளதாலும், நகருக்குள் புகழ்பெற்ற அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் உள்ளதாலும், நாமக்கல் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் போக்குவரத்தை எளிதாக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டியது அவசியம்.
இப்புறவழிச்சாலை அமைப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ரூ.87.00 கோடிக்கு இரண்டாம் திருத்திய நிர்வாக ஒப்புதலும் பெறப்பட்டு நில எடுப்பு பணிகள் நடைபெற்று நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. தற்பொழுது முதலைப்பட்டியிலிருந்து திருச்சி சாலை வரை மூன்று கட்டங்களாக புறவழிச்சாலை அமைப்பதற்காக சி.ஆர்.ஐ.டி.பி திட்டத்தின் கீழ் 12 கிமீ நீளத்திற்கு ரூ.194.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் முதலைப்பட்டி முதலைப்பட்டிபுதூர். செல்லிப்பாளையம், மரூர்பட்டி, செம்பாறைப்புதூர், விட்டமநாயக்கன்பட்டி, வீசாணம், வேட்டாம்பாடி, முத்துகாப்பட்டி, சிவியாம்பாளையம், கூலிப்பட்டி ரெட்டிப்பட்டி, பொம்ம சமுத்திர அக்ரஹாரம், வேப்பநத்தம், வேப்பநத்தம் புதூர் வசந்தபுரம் ஆகிய கிராமங்களின் மூலம் கூடுதலாக 4.00 இலட்சம் மக்கள் பயனடைவார்கள்.
முதற்கட்டப்பணி நாமக்கல் நகருக்கு புறவழிச்சாலையுடன் புதிய பேருந்து நிலைய இணைப்பு சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நான்காவது கட்ட நில எடுப்பு பணிகள் நடைபெற்று,பணிகள் முடிவுற்றவுடன் புறவழிச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நாமக்கல் நகராட்சி முதலைப்பட்டியில் ரூ.194.00 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய முதற்கட்ட பணிகள் நிறைவடைந்ததை ஆய்வு மேற்கொண்டு, 3-ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்தார். இந்த ஆய்வில் நாமக்கல் நகர்மன்றத் துணைத் தலைவர் செ.பூபதி, கோட்டப் பொறியாளர் (நபர்டு) சரவணன், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.