நாமக்கல் மத்தியக் கூட்டுறவு வங்கி உதயம் - தலைவராக இராஜேஸ்குமார் M.P பதவியேற்றார்.
சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் இருந்து பிரிக்கப்பட்டு, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவங்குவதற்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டது. இதையொட்டி நாமக்கல், மோகனூர் ரோட்டில், கந்தசாமி கண்டர் பள்ளி வீதியில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் இயக்குனர்கள் பதவியேற்பு விழா, மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது. சட்ட மன்ற உறுப்பினர்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழாவில் கலந்து கொண்டு மத்தியக் கூட்டுறவு வங்கியின் அலுவலகத்தை திறந்து வைத்து, அதன் தலைவரும், முதன்மை அமைப்பாளர் K.R.N. ராஜேஸ்குமார் எம்.பி.யை பதவியில் அமர்த்தி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது... நாமக்கல் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட தமிழ்நாடு முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறுவார்கள். புதிய நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட அரசு உத்தரவு வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோருக்கு, நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கி கடந்த ஆண்டு, மாநில அளவில், சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருது பெற்றுள்ளது. அதே போல நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கியும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் நகர் மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மீராபாய், நாமக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அருளரசு, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ரமேஷ், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் அசோக்குமார், ராணி, கௌரி, ஜோதிலட்சுமி, செல்வகுமார், பாலசுப்ரமணியம், நவலடி, மாயவன், ராஜேந்திரன், நாமக்கல் நகர திமுக செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவகுமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.