நாமக்கல் கோஸ்டல் ஹோட்டல் கல்லூரி மாணவி மர்ம மரணம் - பெற்றோா்கள் சாலை மறியல்

நாமக்கல் கோஸ்டல் ஹோட்டல் கல்லூரி மாணவி மர்ம மரணம் - பெற்றோா்கள் சாலை மறியல்

கொல்லிமலை யில் உள்ள தனியார் ரிசார்ட்க்கு பயிற்சிக்கு சென்ற கேட்டரிங் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி பெற்றோர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். நாமக்கல் - திருச்செங்கோடு பிரதான சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நாமக்கல் நல்லிபாளையத்தில் இயங்கி வரும் கோஸ்டல் இளங்கோ ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். கோபிகா (17). கோபிகாவை கல்லூரியின் சார்பாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள சேளூர் நாட்டில் மகேந்திரவனம் என்ற தனியார் ஹோட்டலுக்கு 3 மாத பயிற்சிக்கு அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மாணவி கோபிகா கழிப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அந்த ஹோட்டல் உரிமையாளர் வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கோபிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் அருகே கோபிகாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது. மேலும் இந்த விசாரணையில் நாமக்கல் மாவட்ட காவல்துறை நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உடலை பெற மாட்டோம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே மாணவி கோபிகா எவ்வாறு உயிரிழந்தார் என தெரியவரும் என போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து சரியான பதில் வராத காரணத்தால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக நாமக்கல் - திருச்செங்கோடு பிரதான சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story