நாமக்கல்: ஆய்வு அலுவலா்களுக்கு ஆலோசனை கூட்டம்
நாமக்கலில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு அலுவலா்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவருமான மருத்துவர் ச.உமா தலைமையில், வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அப்போது அவர் பேசுகையில்.... நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ள சங்ககிரி,இராசிபுரம்,சேந்தமங்கலம்,நாமக்கல், பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 17 தேர்தல் நுண்பார்வையாளர்கள், 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் என மொத்தம் 51 பணியாளர்கள் வீதம் 102 தேர்தல் நுண்பார்வையாளர்கள், 102 கண்காணிப்பாளர்கள், 102 உதவியாளர்கள் என மொத்தம் 306 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் பணிகளை மேற்கொள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கண்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் ஒவ்வொவரும் வாக்களிப்பது எவ்வாறு நமது ஜனநாயக கடமையோ, அது போல வாக்கு எண்ணிக்கையும் நமது ஜனநாயக கடமை ஆகும். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள ஒவ்வொரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை எவ்வித சுணக்கமின்றி கவனமுடன் பணியாற்றிட வேண்டும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் அறைக்கு கட்டாயம் கைபேசியை எடுத்துவர கூடாது. அனைவரும் நடுநிலைமையோடு தங்கள் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மேலும். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியும், தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரையின்படியும், வாக்கு எண்ணும் மையத்தில் அனைவரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி தேர்தல் பணிகளை நல்ல முறையில் முடிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா அலுவலர்கள் மத்தியில் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ந.சிவக்குமார், வட்டாட்சியர் (தேர்தல்) திருமுருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.