சமரச தீர்வில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் முன்னிலை

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் சமரச பேச்சுவார்த்தை மூலம் ஓராண்டில் அதிக தீர்ப்புகளை வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தால் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் நுகர்வோர் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் தெரிவித்தார்.

தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா, நாமக்கல்லில் நடந்தது. ஆர்.டி.ஓ., பார்த்தீபன் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம் வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ரமோலா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, தொழிலாளர் உதவி ஆணையர் திருநந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் கலந்துகொண்டு நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றிய நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் பேசியதாவது,புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட போதிலும் மூன்றாண்டுகள் தமிழகத்தில் நுகர்வோர் நீதிமன்றங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு தலைவர்களையும் உறுப்பினர்களையும் நியமித்தது.

இதனைத் தொடர்ந்து நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட்டு வருகின்றன.கடந்த ஓராண்டு காலத்தில் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் உட்பட 300 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 36 வழக்குகள் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் சமரச பேச்சுவார்த்தை மூலம் ஓராண்டில் அதிக தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அரை ஏக்கர் பரப்பளவு நிலம் வழங்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் மூன்று பக்கங்களிலும் சுற்றுச்சுவர் உள்ள நிலையில் ஒரு பக்கத்தில் சுற்றுச்சுவர் இல்லை. இதனை போக்கும் வகையில் ஒரு பக்க சுற்றுசுவரைக் கட்ட ரூபாய் 6 லட்சத்தை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ரூபாய் ஆறு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சுவர் கட்ட நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளார். கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு வழியை தெரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள்.

இதன் காரணமாக திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் வழியாக நேரடியாக நுகர்வோர் நீதிமன்றத்திற்கு பாதை அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மிகுந்த உதவியாக இருக்கும்.ஒவ்வொரு மனிதனும் பிறந்தது முதல் இறப்பு வரை ஏதாவது ஒரு வகையில் நுகர்வோர் ஆவார். நுகர்வோர் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் பொருளாதார உரிமையாகும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரிடமும் நுகர்வோர் விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது அவசியமாகும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தேசிய அளவிலும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை அமைக்க வழி வகுத்துள்ளது.

இவற்றைப் போல நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளிலும் 19 பேரூராட்சிகளும் 322 கிராம ஊராட்சிகளிலும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தால் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் நுகர்வோர் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நுகர்வோர் உரிமைகள், குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். முன்னதாக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது.இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story