நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், 2024-2025ஆம் கல்வியாண்டு இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு, மாணவியர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு கடந்த மே-29 அன்று நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளி மாணவியர், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மகள் என 26 மாணவியர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.இக்கல்லூரியில் முதல் கட்டப் பொதுக் கலந்தாய்வு மாணவியர் சேர்க்கை வருகிற திங்கட்கிழமை (ஜூன் 10)தொடங்கி வருகிற ஜூன் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இக்கல்லூரியில் சேருவதற்காக ஆன்லைன்மூலம் விண்ணப்பம் செய்த மாணவிகளுக்குக் கல்லூரியிலிருந்து செல்போன், இ-மெயின், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மூலம் சேர்க்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகள்படி கலந்தாய்வு மூலம் இளநிலைப் பட்டப் படிப்பில் மாணவிகள் சேர்க்கப்படுவார்கள். மாணவிகள் பொதுக் கலந்தாய்வு நாட்களில் காலை 10.00 மணிக்குக் கல்லூரிக்கு வர வேண்டும். வரும்போது 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 11ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றின் ஒரிஜனல் மற்றும் நகல்களைக் கொண்டுவர வேண்டும்.
இளநிலைப் பட்ட வகுப்பு பிரிவில், வருகிற 10ம் தேதி வணிகவியல், பொருளியல் பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை கவுன்சலிங் நடைபெறும். 11ம் தேதி வரலாறு மற்றும் தமிழ் பாடப்பிரிவுகளுக்கும், 12ம் தேதி ஆங்கிலம், கணிதம் பாடப்பிரிவுகளுக்கும், 13ம் தேதி மைக்ரோபயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவுப் கட்டுப்பாட்டு இயல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களுக்கும், 14ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.