நாமக்கல் ஏரி நடைபாதை - மக்கள் பயன்பாட்டிற்கு இராஜேஸ்குமார் எம்.பி திறப்பு

நாமக்கல் கொசவம்பட்டி ஏரி புனரமைக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதையை இராஜேஸ்குமார் எம்.பி திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கொசவம்பட்டி ஏரி நடைபாதையை இராஜேஸ்குமார் எம்.பி திறந்து வைத்தார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், எளிதான போக்குவரத்திற்கு வித்திடும் வகையிலும் ரூ.194 கோடி மதிப்பில் 4 கட்டங்களாக புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதுமட்டுமின்றி ரூ.20 கோடி மதிப்பீட்டில் முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் நகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.313 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக நாமக்கல் நகராட்சியை விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் அறிவிக்க உள்ளார்கள்.

மேலும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4கோடி மதிப்பீட்டில் கொசம்பட்டி ஏரி புனரமைக்கப்பட்டு கரையை பலப்படுத்தி கம்பி வேலி அமைத்து நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய எம்பி ராஜேஜ்குமார், ”நகராட்சி நிர்வாகம் அழகுற அமைக்கப்பட்டுள்ள ஏரியின் நடைபாதையை பொதுமக்கள் தொடர்ந்து நடைபயிற்சிக்கு பயன்படுத்திடும் வகையில் வாக்கர்ஸ் கிளப் அமைத்து பராமரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்ள வரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் சிறுதானிய உணவுகளை வழங்கிடும் வகையில் சிற்றுண்டியகம் அமைத்திட வேண்டும். ஏரி கரை பலப்படுத்தப்பட்டுள்ளதால் நீர் ஆதாரத்தை கண்டறிந்து நீர் தேக்கத்திற்கான வழிமுறைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். தேவையான வழிகாட்டி அறிவிப்பு பலகைகளை அமைத்து நகராட்சி நிர்வாகம் முறையாக பாராமரிக்க வேண்டும்” என்றார்.

Tags

Next Story