நாமக்கல் பழைய அரசு ஆஸ்பத்திரி, தாலுக்கா ஆஸ்பத்திரியாக செயல்பட கோரிக்கை
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை, தாலுக்கா மருத்துவமனையாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என ஆன்மீக இந்து சமயப் பேரவை சார்பில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாமக்கல் நகரின் மையப்பகுதியில், மோகனூர் ரோட்டில், பஸ் நிலையத்திற்கு மிகவும் அருகில் அமைந்துள்ள, நாமக்கல் அரசு மருத்துவமனை, முன்னாள் முதல்வர் காமராரஜால், திறந்து வைக்கப்பட்ட மருத்துவமனையாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வந்தது. நாமக்கல்லில் அரசு மருத்துவலக்கல்லூரி அமைக்கப்பட்டதால், இந்த மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது, திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் நகரில் இருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கு, திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் போது இந்த பழைய மருத்துவமனை மிகப்பெரிய சேவைகளை செய்து வந்துள்ளது. காசநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், எச்ஐவி போன்ற நோயாளிகள் பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நடந்து வந்த மருத்துவ சிகிச்சை பெற்று மாத்திரைகளை வாங்கி சென்றனர். தற்போது அவர்கள் 9 கி.மீ தொலைவிற்கு செல்வது மிகவும் சிரமம். எனவே இதுபோன்ற சூழலில் அவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே பொதுமக்கள் குறிப்பாக ஏழை மக்களின் நலன் கருதி, பழைய அரசு ஆஸ்பத்திரியை தாலுக்கா தலைமை மருத்துவமனையாக அங்கீகரித்து, அவசர சிகிச்சை, நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சை மற்றும் புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளை மட்டும், அதே ஆஸ்பத்திரி கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


