சட்டவிரோதமாக குவாரி அமைக்க உத்தரவிட்ட பிடிஓவை பாராட்டி விநோத போராட்டம்
சட்டவிரோத குவாரி அமைக்க அனுமதி
நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு அருகே நெய்க்காரம்பாளையம் பகுதியில் கல்குவாரிக்கு சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து குடியிருப்பு வீடுகள் பசுமைவீடு உட்பட கிராம கணக்கில் இருப்பதை மறைத்து சட்ட விரோதமாக கல்குவாரிக்கு அனுமதி அளித்த முன்னால் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரனை கண்டித்து, விவாசாயிகள் ஆட்சேபனை தெரிவித்தும் பல மனுக்கள் அளித்தும் இதனை ஏற்காமல் பொய்யான சான்று வழங்கிய பிடிஓ விற்கு பாராட்டு விழா என்ற விநோதப் போராட்டத்தை கோக்கலை சுற்றுவட்டாரப் பொதுமக்கள் நடத்தினர்.
300 மீட்டருக்குள் 4 வீடுகள் உள்ளதை மறைத்தும், அரசு சார்பில் 200 குடும்பங்களுக்கான ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருப்பதை மறைத்தும், பல வீட்டு மனைகளை மறைத்தும் சான்று அளித்த முன்னாள் பி.டி.ஓ. பிரபாகரனை கண்டிக்கும் வகையில் வித்தியாசமான முறையில் பாராட்டுவிழா எனக்கூறி ஆர்பாட்டம் நடத்தினர்.
பின்னர் பிடிஓ மகிமைதாசனிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் தவறாக சான்று வழங்கியதை ரத்து செய்து கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என தெரிவிக்கபட்டது. போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் விவசாயி பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர் செந்தில்குமார், கவுன்சிலர் சுரேஷ் சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், தேவராஜன், மூத்த தோழர் சுந்தரம் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முடிவில் லத்துவாடி ஊராட்சி மன்ற துணை தலைவர் பூசன் நன்றியுரை ஆற்றினார். 100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.