மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கிய ராஜேஸ்குமார் எம்பி

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்‌.ராஜேஸ்குமார் எம்பி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமையில் ரூ.56.64 இலட்சம் மதிப்பில் 59 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், எளிதான போக்குவரத்திற்கு வித்திடும் வகையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி, முதலைப்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி, திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிட ஆலாம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்துதல்,பட்டா வழங்கப்படாத நாரைக்கிணறு பகுதிவாழ் மக்களுக்கு பட்டா வழங்கும் திட்டம், இராசிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, போதமலைக்கு சாலை அமைக்கும் திட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கிட இராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்களை நாமக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறார் என பேசினார்,

மேலும் அவர் பேசுகையில்... நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறவும், அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடைபெறும் மருத்துவ முகாம்களில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு தனித்துவமான அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அடையாள அட்டை கிடைக்க பெற்றால் தான் அரசின் திட்டங்களை பெற இயலும். இதுவரை கடந்த 3 ஆண்டுகளில் 290 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.99 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகோடி மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள் சென்று சேர்ந்திடும் வகையில் இராசிபுரம் வட்டம், கார்கூடல்பட்டி, பிலிப்பாகுட்டை மற்றும் முள்ளுக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நானும் நேரில் சென்று பார்வையிட்டு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.2.00 இலட்சம் உதவித்தொகையினை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினோம்.

அதேபோன்று மோகனூரில் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.9.00 இலட்சத்தில் வீடு, வள்ளிபுரத்தில் கண் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு மகத்தான பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் 59 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.56.64 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஸ்கூட்டர்களை பிறருக்கு பயன்பாட்டிற்கு வழங்க கூடாது. நீங்கள் ஸ்கூட்டர்களை பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் பேசினார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, துணைத்தலைவர் செ.பூபதி உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story