நாமக்கல் : 126 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு - உதவி கமிஷ்னர் தகவல்

நாமக்கல் : 126 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு  - உதவி கமிஷ்னர் தகவல்

பைல் படம் 

நாமக்கல் மாவட்டத்தில் 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை 126 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கலைக்குழு பிரச்சாரம் நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரியில் உள்ள பஸ் நிலையங்களில் நடத்தப்பட்டது. மேலும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டுதல், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், நூற்பாலைகள் மற்றும் விவசாய தொழில்களில் கொத்தடிமைகளாக இருந்த 126 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 நபர்கள் நாமக்கல் மாவட்டத்தையும், 34 பேர் மாவட்டங்களையும், 83 பேர் வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு நிதியாக ரூ.28 லட்சத்து 80 ஆயிரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கொத்தடிமை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்களின் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு அந்நிறுவன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பு குழுவின் மூலம் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் உரிமையாளர்கள் மீது கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு குறையாத வகையில் கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story