நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (05/09/2024) ஆசிரியர் தின விழா கோலாகலத்துடன் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை மாவட்டம் - செய்யாறு - அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் வணிகவியல் துறைப் பேராசிரியர் டி. சந்திரசேகரன் மற்றும் கோவை - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கே. நல்லுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு கல்வியை மட்டும் அல்ல வாழ்க்கை முறையினை கற்றுத்தருவதும் ஆசிரியர்கள் தான். பள்ளிக் கல்வி முதல் கல்லூரி கல்வி வரை அவர்களின் பங்கு மகத்தானது என்று அவர்கள் இந்நிகழ்ச்சியில் பேசினர். நிகழ்வில் கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், கல்லூரி வெள்ளி விழா நிகழ்வின் குழு ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன், நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார் இந்நிகழ்வில் பேசினர். பெருமைமிகு பேராசிரியர் விருது தமிழ்த்துறையைச் சார்ந்த எஸ். ஜெயமதி, கணினி அறிவியல் துறையைச் சார்ந்த ஏ. விஜயசாரதி, வணிகவியல் துறையினைச் சார்ந்த ஜி. நித்யா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும், பெரியார் பல்கலைக்கழகத்தில் 100 சதவீத தேர்ச்சியினை அளித்த கல்லூரிப் பேராசிரியப் பெருமக்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.