நாமக்கல் : உலக சுற்றுச்சூழல் தின ஓவிய போட்டி

நாமக்கல்லில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஓவியங்களை வரைந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தென்னங்கன்றுகள் மற்றும் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல்லில் பசுமை தமிழக மக்கள் இயக்கம், நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கம்,மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நாமக்கல்- மோகனூர் சாலையில் டிரினிட்டி இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, "மரம் நடுவோம்... புவியை காப்போம்..." என்ற தலைப்பில் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வண்ண வண்ண ஓவியங்களை வரைந்தனர்.

புவி வெப்பமயமாதலை தடுத்தல், சிறு நிலங்களில் அதிக அடர் வனங்களை (மியாவாக்கி) ஏற்படுத்துதல், நகர மற்றும் கிராம பகுதிகளில் உள்ள வனப்பரப்பை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவ மாணவிகள் வண்ண வண்ண ஓவியங்களை வரைந்தனர். இதனை பார்வையிட்ட நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அரசு எதிர்தரப்பு வழக்கறிஞர் ஆர். இளஞ்செழியன், பசுமை தமிழகம் மக்கள் இயக்கத்தின் தலைவர் பசுமை வ.சத்யமூர்த்தி, செயலாளர் பசுமை மா.தில்லை சிவக்குமார், டிரினிட்டி பன்னாட்டு பள்ளி தலைவர் PRS. பழனிச்சாமி, சாமுவேல் சீலன், உள்ளிட்டோர் பார்வையிட்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, மரக்கன்றுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அரசு எதிர் தரப்பு வழக்கறிஞர் R.இளஞ்செழியன், உலக அளவில் பூமியை காத்து எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு இந்த தினத்தின் அவசியத்தை எடுத்துக் கூறி எதிர்காலத்தில் அவர்கள் இயற்கையுடன் கூடிய ஆரோக்கிய வாழ்வை வாழ்வதற்கு இதுபோன்ற அமைப்புகள் பெரிதும் உறுதுணை புரிகின்றன. 1972 முதல் ஐநா சபையில் சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப் பொருள் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் 'நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மை' என்பதாகும். இந்த நிகழ்வின் முழக்கம் "எங்கள் நிலம், நமது எதிர்காலம்" என்பதாகும் என்று கூறினார்.சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதலாத் ) நடத்தப்பட்டு வழக்குகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கத்தின் வட்டார தலைவர் மருத்துவர் ப. எழில்செல்வன், நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கத்தின் தலைவர் ராஜ்குமார், ஓவிய ஆசிரியர்கள் மகாமணி, சிவக்குமார், மகளிர் கல்லூரியின் செயல் இயக்குனர் அருணா செல்வராஜ், பள்ளி செயலாளர் இராம. சீனிவாசன், பள்ளி இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் , விவசாயிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.முன்னதாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story