நான் முதல்வன் திட்டம் : பள்ளி மாணவர்கள் கல்லூரியில் களப்பயணம்
நான் முதல்வன் திட்டம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.இதில், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, இரா.புதுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமகிரிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி என சுமார் 210 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை, கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பானுமதி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வரலாறு, வணிகவியல், வேதியியல், இயற்பியல் மற்றும் உடற்கல்வி போன்ற ஒவ்வொரு துறை தலைவர்களும் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு எந்தெந்த துறையினை எடுத்து படிக்கலாம் என்பது குறித்து தெளிவாக கூறினார்கள். மேலும், ஒவ்வொரு துறையிலும் தற்சமயம் உள்ள வேலை வாய்ப்பினை பற்றியும் எடுத்துரைத்தனர்.
கணினி அறிவியல் துறை, ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை, வேதியியல், இயற்பியல் துறை, உயிரியல் துறை மற்றும் உடற்கல்வி துறை ஆகிய துறைகளில் ஆய்வகங்களை மாணவர்கள் நேரடியாக பார்வையிட்டனர். அப்போது, அந்தந்த துறை பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் ஆய்வகங்களின் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் தேநீர், சிற்றுண்டி மற்றும் மதியஉணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும், பள்ளி மாணவர்கள் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு சென்று வர போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேராசிரியர்கள் பிரபு, ராஜேந்திரன் மற்றும் வெண்ணந்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மா.சுந்தரராஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இது உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.