நரசிம்ம ஜெயந்தி - மெலட்டூர் பாகவத மேளா

நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு மெலட்டூரில் பாகவத மேளா நடைபெற்றது.

பாபநாசம் அருகே மெலட்டூரில் நரசிம்ம ஜெயந்தியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைப் பெறுகிறது. பாகவத மேளா சுமார் ஆறு நூற்றாண்டுகளை கடந்தும் நடந்து வருகிறது. விஜயநகரப் பேரரசின் பேரரசர்கள், செவ்வப்ப நாயக்கரின் மகன் அச்சுதராயரை தஞ்சாவூரின் ஆட்சியாளராக நியமித்தனர். கலையின் மீது ஆர்வம் கொண்ட அரசானது பாகவத மேளா கலையில் தேர்ச்சிப் பெற்ற 500 பிராமணர்களுக்கு தங்குமிடம் வழங்கியது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் சமகாலத்தவரான மெலட்டூர் வேங்கடராம சாஸ்திரி எழுதிய பத்து நாட்டிய நாடகங்களே மெலட்டூர் பாகவத மேளா கலை வடிவத்திற்கு அடித்தளமாக அமைந்தன. மெலட்டூர் பாகவத மேளா என்பது நாட்டிய நாடகம். இதில் நடிப்பு, நடனம், பாடல், இசை என அனைத்தையும் ஆண்களே மேற்க் கொள்கின்றனர். மேலும், பெண் கதாபாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடத்துகின்றனர். மெலட்டூர் பாகவத மேளா சில குடும்பங்களில் பாரம்பரியமாக இருந்து வந்தது. சரியான அங்கீகாரம் மற்றும் தளம் இல்லாததால் இது ஒரு நாட்டுப்புற கலை வடிவம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இது விஜயநகர பேரரசர்கள் காலத்தில் அவர்களின் தாய்மொழியான தெலுங்கு மொழியில் வளர்க்கப்பட்டப் போதிலும் தொடர்ந்து தமிழர்களால் காப்பாற்றப்பட்டு வரும் கலை வடிவம் ஆகும். ஒரு காலத்தில் மெலட்டூர் சாலியமங்கலம் சூலமங்கலம், நல்லூர், ஊத்துக்காடு புலிமேடு, கோவிந்தபுரம், திருவிசநல்லூர், தேப்பெருமாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் பாகவத மேளா நாடகங்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது அனைத்து இடங்களிலும் நடைப் பெறாமல், சாலியமங்கலம் தேப்பெருமாநல்லூர் மெலட்டூர் உள்ளிட்ட ஊர்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. வெங்கட்ராம சாஸ்திரிகள் இயற்றிய பிரகலாதத சரித்திரம், ருக்மிணி கல்யாணம், சீதா கல்யாணம், உஷா பரிணயம், கிருஷ்ண ஜனன லீலா, மார்க்கண்டேய சரித்திரம், பார்வதி கல்யாணம், துருவ சரித்திரம், ஹரிஹர லீலா விலாசம், அரிச் சந்திரா ஆகிய பத்து நாடங்களில் பெரும்பாலானவை மெலட்டூர் கிராமத்தில் மட்டுமே உயிரோட்டமாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

ஓலைச்சுவடி வடிவத்தில் இருந்த மெலட்டூர் வெங்கட்ராம சாஸ்திரிகள் இயற்றிய பத்து நாடங்களையும் பாகவதமேளா நாட்டிய நாடக அறக்கட்டளை சார்பில் கலைமாமணி மகாலிங்கம் அச்சுவடிவத்த்தில் புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். அரிச்சந்திரா நாடகம் சென்னை சமஸ்கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் தேவி பிரசாத், தஞ்சாவூர் சரசுவதி மஹால் முன்னாள் தெலுகு பண்டிட் விஸ்வநாதன் போன்றவர்களின் முயற்சியால் புத்த வடிவம் பெற்றது. கலைமாமணி மகாலிங்கம் முயற்சியால் ஏற்கனவே ஆறு நாடகங்கள் புத்தக வடிவம் பெற்றன. மற்றவற்றையும் புத்தகங்களாக வெளியிட முயற்சிகள் தொடர்கின்றன.

Tags

Next Story