தேசிய மருத்துவர் தினம் : வாழ்த்து மாணவர்கள் - நெகிழ்ந்த மருத்துவர்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் குமரப்பா வித்யாலயா என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு பள்ளி வேன்களில் சென்று, பேராவூரணியைச் சேர்ந்த பிரபல மருத்துவரும், மருத்துவத்துறை சம்பந்தமான நூல்களை எழுதியவரும், எழுத்தாளருமான டாக்டர் துரை.நீலகண்டன் என்பவரை அவரது மருத்துவமனையில் சந்தித்து, நினைவுப்பரிசு வழங்கி, தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது சில பள்ளிக் குழந்தைகள் மருத்துவர் போல் உடை அணிந்து இருந்தனர். தனது பணியில் பிஸியாக இருந்த மருத்துவர் குழந்தைகளின் வாழ்த்தால் நெகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து குழந்தைகளுக்கு அவர் மிட்டாய் மற்றும் தான் எழுதிய நூல்களை வழங்கி தனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தேசிய மருத்துவர் தினம் என்பது, புகழ்பெற்ற மருத்துவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், மேற்கு வங்கத்தில் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரா ராயின் பிறப்பு மற்றும் மறைவு தினத்தை கௌரவிப்பதற்காக ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது" எனவும் மாணவர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து, பள்ளி நிர்வாகி அஸ்வின் கணபதி கூறுகையில், "குழந்தைகளுக்கு வகுப்பறையில் பாடம் கற்பிப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு அந்தந்த தினத்தின் முக்கியத்தை உணரும் வகையில், தேசிய மருத்துவர் தினத்தன்று மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க செய்தோம். இதன் மூலம் மாணவர்களுக்கு கற்றலில் புது அனுபவம் கிடைத்தது என நம்புகிறோம்" என்றார்.