தஞ்சாவூரில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி 

தஞ்சாவூரில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி 
விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டனர்.

அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு, தஞ்சாவூர் திலகர் திடலில் சனிக்கிழமையன்று தலைக்கவசம் மற்றும் இருக்கை பட்டை அணிதல் குறித்த விழிப்புணர்வு வாகனப் பேரணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் ஆகியோர் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு வாகன பேரணியில் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட இப்பேரணியில்,

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், வாகன விற்பனை முகவர்கள், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், காவல்துறை, உரிமம் பெற வந்திருந்த பொதுமக்கள் என சுமார் 400க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர்கள், 50 க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் பங்கேற்றனர். இப்பேரணி தஞ்சாவூர் திலகர் திடலில் ஆரம்பித்து சோழன் சிலை, பெரிய கோவில், மேம்பாலம்,

அன்னை சத்யா விளையாட்டு அரங்கம், ராஜப்பா நகர், குந்தவை நாச்சியார் கல்லூரி வழியாக ஐடிஐ மைதானத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில், பங்கு பெற்ற அனைவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் நெகிழியை தவிர்த்து, சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய மஞ்சப் பையினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ்.ஸ்ரீகாந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) மோகன், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஆனந்த், தேனேஸ்வரி, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story