நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
அக்கரைபாளையத்தில் விம்ஸ் மருத்துவமனை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா வீரபாண்டி ஒன்றியம் அக்கரைபாளையம் பஞ்சாயத்து பகுதியில் நடந்தது.
துறையின் டீன் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுலகண்ணன், அக்கரைபாளையம் ஊராட்சி துணைத்தலைவர் கிருத்திக ராஜா முகாமை தொடங்கி வைத்தார். பாலம்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடக்க விழாவில் பாலம்பட்டி, அக்கரைபாளையம் ஊராட்சி பகுதியில் சுமார் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து பாலம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து 7 நாட்கள் நடந்த முகாமின் மூலம் பல்வேறு சுகாதார பணிகளையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், ஜெயபாலன், மெய்பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.