நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் கே.ஜி. மாணவர்களின் தனித் திறனை மேம்படுத்தும் கலை நிகழ்ச்சி அசத்திய மழலைச் செல்வங்கள்! ஆச்சரியத்தில் பெற்றோர்கள்!!
நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் கே.ஜி. மாணவர்களின் தனித் திறனை மேம்படுத்தும் கலை நிகழ்ச்சி நடந்தது. டிசம்பர் 21. இன்று சனிக்கிழமை காலை பத்து மணியளவில் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியின் கலையரங்கத்தில் கே.ஜி. மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். அதில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு மிகவும் அழகாகவும், திறமையாக பேசியும், நடித்தும் காட்டினார்கள், இதனை கண்டு பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் வியந்து குழந்தைச் செல்வங்களைப் பாராட்டினார்கள்.
குழந்தைகள் ஐவகை நிலங்களாகவும், அவற்றின் பயன்கள் வாழ்க்கை முறைகளையும், நடித்துக்காட்டினார்கள். மேலும் பஞ்சபூதத்தின் பயன்கள், சூரிய குடும்பத்தின் தோற்றம், இயங்கும் முறைகள், மரங்களின் பயன்கள், காற்று மாசுபாடு, செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு, மற்றும் தமிழ் மொழியில் ஓலிகளை உச்சரிக்கும் முறை, நினைவாற்றலை பெருக்கும் யோகா முறைகள், தலைவர்கள், புலவர்கள், போல மாற்றுடை அணிந்து பேசுதல் என பல திறமைகளை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்றனர்.
பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி அவர்கள் பேசும் போது "குழந்தைகள் இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுத்த மாபெரும் கொடை. அவர்களை திறமையானவர்களாக மாற்றுவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது என்று கூறினார். மேலும் ஒரு வயதில் எவ்வளவு அக்கரையோடும், அன்போடும் பேசுகிறோமோ அதே போல இளைஞர்கள் ஆனாலும் அன்பும் அக்கரையும் மாறாமல் பேச வேண்டும், அவர்களின் தனித்திறனை கண்டறிந்து பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறி வாழ்த்தினார். பள்ளி முதல்வர், பெற்றோர்கள், என அனைவரும் வாழ்த்தினார்கள்.