மர்காஷிஸ் கல்லூரியில் காமன் பீஸ் என்ற பெயரில் வசூல் வேட்டை!

கல்லூரி மாணவிகள் புகார்
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி தூத்துக்குடி-நாசரேத் திருமணடல நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் சிறுபான்மை கல்லூரி ஆகும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் இக்கல்லூரியில் இளங்கலை பி.ஏ., பொருளாதாரம், ஆங்கிலம், வரலாறு, தமிழ், பி.எஸ்.சி., கணிதம், விலங்கியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., வணிகவியல், முதுகலை பட்டப் படிப்பில் ஆங்கிலம் வரலாறு, கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம். பில்., காமர்ஸ் ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
இங்கு சுமார் 600 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பமாக இருப்பதால் ஹால் டிக்கெட் வாங்க மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருகை தந்த போது கல்லூரி நிர்வாகத்தால் காமன் பீஸ் என்ற பெயரில் ரூ. 600 கட்டினால் மட்டுமே ஹால் டிக்கெட் கையெழுத்துப் போடப்பட்டு அலுவலக முத்திரையுடன் வழங்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு மாணவ,மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது ஒரு கட்டத்தில் அவர்கள்அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்படி இருந்தும் காமன் பீஸ் என்ற பெயரில் ரூபாய் 600 ஐ எந்தவித ரசீதும் இல்லாமல் பெற்றுக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கியுள்ளனர். இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனரகம் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்குமாறு மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் விரும்புகின்றனர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரி முதல்வரிடம் கேட்டதற்கு ரூபாய் 600 கட்டினால் மட்டுமே ஹால் டிக்கெட்டில் கையெழுத்து போடப்பட்டு அலுவலகம் முத்திரையிடப்படும் என பதில் கூறியதாக தெரிகிறது.
