நிவாரணம் வேண்டும்... நோய் தாக்குதலால் செங்கரும்பு விளைச்சல் பாதிப்பு
திருவையாறில் நோய் தாக்குதலால் செங்கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்குமாறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நோய் தாக்குதலால் செங்கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டு நஷ்மடைந்துள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் கல்யணாபுரம், பொன்னாவாரை, கண்டியூர், மாத்தூர், போன்ற இடங்களில் அதுபோல பூதலூர் வட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி, புதுக்குடி போன்ற சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செங்கரும்பு சாகுபடியில் மஞ்சள் நோய் குறித்து பூச்சி தாக்குதலில் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. கடன் வாங்கி கஷ்டப்பட்டு செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். திருவையாறு வட்டம் நடுக்கடை அருகேயுள்ள கல்யாணபுரம் பொன்னாவாரை கிராமத்தில் செங்கரும்பு சாகுபடி செய்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் நோய் தாக்குதலால் செங்கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி பயிர் செய்த செங்கரும்பு சாகுபடி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசு உடனடியாக வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்த பட்சம் ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் சிறப்பு பரிசு திட்டத்தில் வழங்கும் செங்கரும்பு மற்றும் இதர பொருள்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பூதலூர் வட்டங்களில் விளைந்த செங்கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.