திருநங்கைகள் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல்
திருப்பூரில் திருநங்கைகள் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் ஆகியோர் கலந்து கொண்டுதிறந்து வைத்தனர். தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக அளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வாவிபாளையம் பகுதியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் சார்பில் இன்று நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதனை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதன் காரணமாக பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தங்களால் இயன்ற அளவில் நீர்மோர் பந்தல் அமைத்து உதவி வருவதாக திருநங்கைகள் தெரிவித்தனர்.